ஓபிசி மக்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்த பிகார் முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது..!
கலை, இலக்கியம், கல்வி, அறிவியல், அரசியல் என பல துறைகளில் பெரிய அளவில் சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது தான் பாரத ரத்னா விருது. தற்போது இந்த விருதை பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
1970-71 மற்றும் 1977-79 காலக்கட்டங்களில் பிகார் முதல்வராக பதவி வகித்தவர் கர்பூரி தாக்குர். தனது இளம் வயது முதல் சோஷியலிச இயக்கத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். ஓபிசி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைக்காகவும், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்காக பல சட்டங்களை இயற்றியும், பல சட்டங்கள் இயற்றப்படுவதற்கு காரணமானவராகவும் விளங்கியவர் கர்பூரி தாக்குர். இதற்காக அவர் நடத்திய போராட்டங்களும், அதன் விளைவாக அனுபவித்த சிறைவாசமும் அதிகம்.
இவ்வாறு ஓபிசி மக்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்த கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில், அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 1988-இல் மறைந்த கர்பூரி தாக்குருக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.