மஞ்சூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ..! திணறும் வனத்துறை..!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் மற்றும் பட்டா நிலங்களில் உள்ள மரங்கள், செடிகள், புல்வெளிகள் உள்ளிட்டவை கருகி காணப்படுகிறது. இந்த வறண்ட சூழ்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
கடும் வெயில் காரணமாக கொடைக்கானல் பெருமாள்மலையை அடுத்த மஞ்சூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. இதனால் அப்பகுதியில் பல ஏக்கரில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகள் எரிந்து கருகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளும் பாதிப்படைந்து இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ நிலவும் இடத்தில் வனத்துறையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.