யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை!
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் யூடியூபர் டி.டி.எப்.வாசன்.
இந்த நிலையில் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்தப் பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
டி.டி.எப்.வாசன் உரிமம் பெற்றிருந்தாலும் பாம்பைத் துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே டி.டி.எப்.வாசனின் வெள்ளியங்காடு இல்லத்துக்குக் காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வேறு ஏதாவது விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்துப் பராமரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், இங்குள்ள வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களைச் சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்றனர்.