33 மாத ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்தன: அரசு..!
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து இம்மாநிலத்தை தொழில் கோட்டமாக உருவாக்க முதல்வர் ஓய்வின்றி தீவிரமாக உழைத்து வருகிறார் என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளியலைக் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும், இந்தியப் பொருளியலுக்கு முக்கியப் பங்கு அளிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் எனும் பெரும் லட்சியத்தை முதல்வர் நிர்ணயித்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
‘முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதன் மூலம் 2,80,600 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17,371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 7,441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
மூன்றாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம், சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26,90,657 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்காம் கட்டமாக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று 3,440 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாடு குறித்தும், தமிழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த முதலீடுகள் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அரசு, தமிழகத்தை மிகப் பெரிய அளவில் தொழில் மயமாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலவங்கி உருவாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.