மாநிலத்தில் முதல் முறை.. ஆணாக மாற பெண் காவலருக்கு அனுமதி..!
மத்திய பிரதேசத்தில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், ஆணாக மாறுவதற்கு தனக்கு அனுமதி வழங்கக்கோரி மாநில உள்துறையிடம் கடந்த 2019ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.
அத்துடன், அரசு ஆவணங்களிலும் தன் பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்ற அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவரின் கோரிக்கையை மாநில உள்துறை அமைச்சகம் ஏற்றுள்ளது.
இதுகுறித்து உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா கூறியதாவது: “சிறு வயதில் இருந்தே அந்த பெண் கான்ஸ்டபிள், தன் பாலினத்தை அடையாளம் காண முடியாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை, உளவியலாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.
அவர், ஆண் கான்ஸ்டபிளை போல அனைத்து விதமான பணிகளையும் எளிதில் செய்து முடிக்கும் திறன் உடையவர். இதன் அடிப்படையில், அவரின் கோரிக்கையை ஏற்று, அவரின் விருப்பப்படி பாலினத்தை மாற்ற மாநில டிஜிபிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
நாட்டின் சட்ட விதிகளின்படி, ஒரு இந்தியக் குடிமகன் தனது மதம் மற்றும் சாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனது பாலினத்தை தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பதன் அடிப்படையில், இந்த அனுமதியை மத்திய பிரதேச உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது என்று, அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அந்த மாநிலத்தில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அனுமதி வழங்குவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.