1. Home
  2. தமிழ்நாடு

இந்திய வரலாற்றில் முதல்முறை: பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல்..!

1

18-வது பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைத்தது. மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் (ஜூன் 24) கூடியது. அன்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மக்களவை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 25) பதவியேற்றனர்.

இதனிடையே, மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மக்களவை சபாநாயகர் தேர்வு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, அரசு தரப்பில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதனை அரசு தற்போதே உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆளும் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டால் சபாநாயகரை ஆதரிப்பதாக கார்கே நிபந்தனை விதித்தார். இதையடுத்து, கார்கேவின் கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு பிறகு தெரிவிப்பதாக ராஜ்நாத் சிங் கூறியதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17வது மக்களவையின் சபாநாயகராகவும் ஓம் பிர்லா இருந்தவர். மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக சார்பில் ஓம் பிர்லா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆளும் கூட்டணியின் இந்த அறிவிப்பை அடுத்து, 8 முறை மக்களவைக்குத் தேர்வான மூத்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து நேற்று அவர் சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். 

சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா மற்றும் காங்கிரஸ் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்த்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் தேர்வில் போட்டி உறுதியாகி உள்ளது. சுதந்திர இந்தியாவின் பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சபாநாயகர் பதவிக்கு பாஜக - காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேர்தல் இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like