வரும் 3-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு.. தமிழக அரசு முக்கிய அரசாணை..!

தமிழகத்தில் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி வகுப்புகள் சுழற்சி முறை இன்றி நடைபெறும் என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
அதே போல், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் கடந்த மாதம் முதல் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியது.இந்த வகுப்புகள் அனைத்தும் அரசு வழங்கி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்பு ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியதாவது; தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வரும் 3.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.