1. Home
  2. தமிழ்நாடு

வரும் ஜூலை 1 முதல் ஆன்லைன் மூலமாக உணவு விற்பனை செய்யப்படமாட்டாது..!

1

ஸ்விக்கி, சொமேட்டோ என இணையதள உணவு விநியோக நிறுவனங்கள் பெருகிவிட்டன. நாம் சாதாரணமாக சாலையில் சென்றாலே ஸ்விக்கி, சொமாட்டோ டீ -ஷர்ட் அணிந்தவாறு பைக்கில் பறந்து சென்று உணவு செய்யும் குறைந்தது 10 பேரையாவது பார்க்க முடியும். அந்த அளவுக்கு இன்றைக்கு இணையதள வியாபாரம் வியாபித்து விட்டது.

அதில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்வதால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு கழிவுகள் போக மிகவும் குறைந்த தொகையே கிடைப்பதாக குற்றச்சாட்டு எழும்பி இருக்கிறது. இதைக் கண்டித்து நாமக்கல்லில் ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் தங்களுக்கான கமிஷன் முறையாக கிடைக்காததால், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க மாட்டோம் என நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த சங்கத்தின் தலைவர் ராம்குமார் தலைமையில் சமீபத்தில் நாமக்கல்லில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் தங்களது கோரிக்கைக்கு உடன்படாவிட்டால், உணவு விநியோகம் செய்யப்பட மாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சங்கத் தலைவர் ராம்குமார் கூறியதாவது:

சமீப நாட்களாக இணையதள நிறுவனங்கள் எங்களுக்கு போதிய தொகையைத் தருவதில்லை. விளம்பர செலவு, டெலிவரி சார்ஜ் என பல்வேறு வழிகளில் எங்களுக்கான கட்டணத்தை குறைக்கின்றனர். மேலும், ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு மாதிரி கமிஷன் வழங்குகின்றனர். இது எங்களுக்கு மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

"ரூ.10,000-இல் ரூ.6,000-ஐ கழிக்கின்றனர்"

இன்னும் சொல்லப் போனால், 10,000 ரூபாய்க்கு உணவு விநியோகம் செய்தால், அதில் 6 ஆயிரம் ரூபாயைக் கழித்துக் கொள்கின்றனர். அதற்கான காரணத்தையும் சொல்வதில்லை. இதனால் ஹோட்டல் உரிமையாளருக்கு மிகப்பெரிய அளவில் பண நெருக்கடி ஏற்படுகிறது. ஆகையால் எங்களது பிரச்சினைகளுக்கு இணையதள உணவு விநியோக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.


பின்வாங்கப் போவதில்லை: ஹோட்டல் உரிமையாளர்கள்


வரும் 30-ஆம் தேதிக்குள் எங்களை சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்தால், ஜூலை 1-ஆம் தேதி முதல் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்களுக்கு உணவு பொருட்களை வழங்க மாட்டோம். இந்த முடிவில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

நாமக்கல்லில் பலரும் இணையதள உணவு விநியோகத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருவதால், ஹோட்டல் உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு ஸ்விக்கி, சொமாட்டோ ஓட்டுபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

Trending News

Latest News

You May Like