மக்களே இன்று வெளியே வராதீங்க ..! தமிழகத்தில் இன்று வெப்பம் மேலும் உயரும்..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய தமிழக சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 42.0 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 40.5 டிகிரி செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 40.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.2 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ், மதுரையில் (நகரம்) & தஞ்சாவூரில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி –31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும். இன்று முதல் 03.05.2024 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 04.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 04.05.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரிசெல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வரும் 04.05.2024 வரை, அடுத்த 4 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 டிகிரி-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.