1. Home
  2. தமிழ்நாடு

கொடைக்கானலில் பகலேயே இரவாக மாற்றிய பனிமூட்டம்..!

Q

கொடைக்கானலில் கடந்த 3 தினங்களாகக் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சாரமும் அதிக நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் மலைச்சாலையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகரின் பல பகுதிகளில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய டோபிகானல் பகுதி வழியாக ஓடும் நீரோடையில் நட்சத்திர ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர்அதிகமாக வெளியேறுவதாலும் தொடர் மழையாலும் அதிகமான நீர் வெளியேறிக் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால் இப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வீட்டில் தங்கி இருப்பவர்கள் முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை நேரத்தில் மழை அளவு குறைந்து கடும் பனிமூட்டம் நிலவியது.இதனால் நகரின் பல பகுதிகளில் அதிகமான பனிமூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
மேலும் நீண்ட நேரம் இப்பனிமூட்டம் நீடித்தது.நட்சத்திர ஏரிப்பகுதியில் சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாகக் காணப்பட்ட பனிமூட்டத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.
நட்சத்திர ஏரியை ஒட்டிய நடைமேடையில் கேரள கல்லூரி மாணவிகள் பனிமூட்டத்தை ரசித்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். மிக நீண்ட நேரம் நீடித்த பனிமூட்டத்தை ஏரிச்சாலையை சுற்றி வந்த சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் நகர் பகுதியில் அவ்வப்போது பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.இன்று காலை மேகமூட்டம் கூட இல்லாமல் வெயில் தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாகச் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like