ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு..!

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது.
ஊட்டி ரோஜா பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களைக் கொண்டு யானை, புறா, புலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெற்றது. நேற்று காலை நிலவரப்படி, கடந்த 10 நாட்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையுடன் மலர் கண்காட்சி நிறைவு பெறுவதையொட்டி சுற்றுலா பயணிகள் கண்காட்சியை காண ரோஜா பூங்காவில் நேற்று அதிக அளவில் குவிந்து கண்டுகளித்தனர்.