குற்றவாளிக்கு மாவுக்கட்டு!
அண்ணா பல்கலைக் கழகத்தில் 2ம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை (23.12.24) தனது ஆண் நண்பருடன் இரவு 7.45 மணியளவில் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஆய்வக கட்டிடத்தின் பின்புறம் தனிமையில் பேசிக் கொண்டிருந்துந்ததை புதருக்குள் இருந்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட மர்மநபர் இருவரையும் தாக்கி, மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 24-ம் தேதி எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞானசேகரன் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதில், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் 2 வது மனைவியை அழைத்து செல்ல ஞானசேகரன் தினமும் 7 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்திற்குள் சென்று இதே வேளையில் ஈடுபட்டு வந்துள்ளார். தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் ஞானசேகரன் போனை ஆய்வு செய்ததில் பல பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் முக்கியமாக இரவு நேரத்தில் கடையை மூடிவிட்டு செல்லும் நேரத்தில் இதுபோன்று பெண்களிடம் அத்துமீறி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
போலீசார் ஞானசேகரனைக் கைது செய்யும்போது, அவர் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் இடது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.