3 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடித் திருவிழா! வகை வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மரவனூர் கிராமத்தில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பெய்த மழை காரணமாக குளம் முழுவதுமாக நிரம்பியது.
கோடைகாலம் என்பதால் குளத்தில் தண்ணீர் குறிப்பிட்ட அளவு குறைந்து, மீன்கள் பிடிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும் நிலையில் மீன்பிடித் திருவிழா என்னும் சமூகத் திருவிழாவானது விமரிசையாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வோர், பெரிய வலைகளையும், சிக்கு வலைகளையும் பயன்படுத்த அனுமதியில்லை, மீன் பிடித்து விற்பனை செய்யவும் அனுமதி இல்லை என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
3 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த மீன்பிடி திருவிழாவானது அதிகாலை 6 மணிக்கு துவங்கியது. மரவனூர் செடல் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர் முக்கியஸ்தர் கபில்தேவ் குளத்தின் கரையில் இருந்து வெள்ளை நிறத் துண்டை தலைக்கு மேல் சுழற்றி மீன் பிடிக்க உத்தரவு வழங்கினார்.
உடனே மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக நின்றிருந்த பொதுமக்கள் உத்தரவு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் குளத்தில் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன் பிடிக்கத் துவங்கினர். இந்த மீன்பிடி திருவிழாவில் கட்லா, விரால், குரவை, ஜிலேபி கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர்.
இந்த திருவிழாவில் மரவனூர், குளவாய்ப்பட்டி, களராம்பட்டி தெற்குகளம், இடையபட்டி, உள்ளிட்ட சுற்றுப்புற 18 பட்டி கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் கலந்து கொண்டனர். பெரிய அளவிலான மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் அதிக அளவிலான மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.