1. Home
  2. தமிழ்நாடு

பேனா சின்னத்தை எதிர்த்த மீனவர்களின் மனு தள்ளுபடி !

1

மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி, சென்னையை சேர்ந்த தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த சூசை அந்தோணி ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் சஞ்சய் கிஷன்கவுல், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் மனுதாரர் தரப்பில் கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியது தானே? என கேள்வி எழுப்பினர். மேலும் சுற்று சூழல் சார்ந்த விவகாரம் என்றால் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாமே? என வினவிய அவர்கள்  ஒவ்வொரு முறையும் ஏன் அரசியலமைப்பு பிரிவு 32ன் கீழ் மனு தாக்கல் செய்து நேரடியாக எதற்கு உச்சநீதிமன்றம் வருகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மாநிலம் சார்ந்த இதுபோன்ற பிரச்சனைகளை உரிய அமைப்பு முன்பு அணுக வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை பொறுத்தவரை பசுமை தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றம் தான் உரிய அமைப்பு எனவும் அறிவுறுத்தினர்.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்  பி.வில்சன், இந்த வழக்கு ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை மீனவர்களின் கருத்து கேட்கப்பட்டது எனவே இது CRZ சட்டத்தை மீறியது ஆகாது என தெரிவித்தார். இதை எதிர்த்து மீனவர்கள் தரப்பு வாதிடுகையில் ஏற்கனவே கருணாநிதி சமாதிக்கு அனுமதி உயர்நீதிமன்றம் வழங்கியதால் அதனால் இது பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல என்று கூற முடியாது எனவே பேனா சின்னம் CRZ சட்டத்தை மீறியதே எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் இறுதி முடிவை தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவை ஏற்க முடியாது எனவும் மனு வாபஸ் பெறப்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளதால், மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் பேனா சின்னம் விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தையோ அல்லது பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட உரிய அமைப்பையோ அணுக தடையில்லை எனவும் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like