மீன் பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீன்வர்கள்! விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி!

ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கிழக்கு கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் அடைவதற்காக மீன்பிடி தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் 14 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து யாரும் தொழிலுக்கு செல்லவில்லை.
அதனைத் தொடர்ந்து மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளில் டீசல், வலை, ஐஸ் மற்றும் உணவுப் பொருள்கள் போன்றவற்றை ஏற்றி வந்தனர். விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
61 நாட்களுக்குப் பிறகு கடலில் மீன் பிடிக்க ஒன்றன் பின் ஒன்றாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் அணிவகுத்து கடலுக்கு சென்றன. உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் இரவு ஒவ்வொன்றாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திற்கு வர துவங்கியது. மீனவர்களின் வலையில் நெய் மீன், பாரை, கணவாய், நெடுவா போன்ற உயர்தர மீன்களும் நெத்திலி, சாலை போன்ற சிறிய வகை மீன்களும் ஏராளமாக கிடைத்துள்ளன.
இந்த மீன்களை ஏலம் எடுப்பதற்காக கேரளாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மொத்த மற்றும் சிறு வியாபரிகளும் அங்கு குவிந்தனர். இந்நிலையில் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் விசைப்படகு உரிமையாளர்களும், பணியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.