மீனவர்கள் ஆயத்தம்..! இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெறுகிறது..!

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியான வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ந் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களில் 6,700 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் ஓய்வெடுத்து வந்தன.
மீன்பிடி தடைக்காலமான இந்த 61 நாட்களும் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
பொதுவாக, கடலில் குறைந்த தூரத்திற்கு கட்டுமரம், பைபர் படகுகளில் சென்று மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், குடிக்க தண்ணீர் மட்டுமே கூடுதலாக எடுத்துச் செல்வார்கள். ஆனால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்தையும் விசைப்படகுகளில் மீனவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த வகையில், மீண்டும் மீன்பிடிக்க செல்ல இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால், விசைப்படகுகளில் மீன்களை பதப்படுத்தி வைக்கும் கீழ் அறைகளில் ஐஸ் கட்டிகளை நிரப்பி வைப்பது, தேவையான அளவு குடிநீர் கேன்களை வாங்குவது, படகுகளிலேயே உணவு சமைக்க தேவையான பொருட்களை எடுத்துச்செல்வது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படுகிறது.