மீன் நல்லது.. அதுவே வாரம் ஒருமுறை மத்தி மீன் சாப்பிட்டால்...
மத்தி மீன் மக்களிடையே பிரபலமாக உள்ளது. நிறைய பேர் இந்த மீனை அலைந்து திரிந்து வாங்கி சாப்பிட நினைக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற மீன்களை விட மத்தி மீனில் ஏராளமான சத்துக்கள் இருப்பது தான்.இந்த மீன்களில் மற்ற மீன்களை விட ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. இந்த ஒமேகா-3 கொழுப்பானது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இப்படிப்பட்ட மத்தி மீனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று தெரியுமா?
1. எலும்புகள் வலுபெறும்
100 கிராம் மத்தி மீனில் 400 மிலி பாலில் உள்ள கால்சியம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள் வாரத்திற்கு 1-2 முறை மத்தி மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு போதுமான கால்சியம் கிடைத்து, எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுபெறும்.
2. இரத்த அழுத்தம் கட்டுப்படும் மத்தி மீனில் அமினோ அமிலங்களான அர்ஜினைன் மற்றும் டாரைன் போன்றவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் கார்டியோமெடபாலிக் மற்றும் இன்சுலின் எதிர்ப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும். அதுவும் வயதானவர்கள் வாரத்திற்கு 2 முறை மத்தி மீனை உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3. புரோட்டீன் அதிகம் உள்ளது மத்தி மீனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளன. அதுவும் எளிதில் ஜீரணமாகக்கூடிய புரோட்டீன்களில் அனைத்துவிதமான அமினோ அமிலங்கள் உள்ளன. எனவே புரோட்டீன் அதிகம் நிறைந்த மத்தி மீனை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது, அது கரோனரி இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
4. நல்ல கொலஸ்ட்ரால் மேம்படும்
மத்தி மீன்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் போதுமான அளவில் இருந்தால், இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் இதய நோயின் அபாயமும் குறையும்.
5. உடல் எடை கட்டுப்படும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உணவில் மத்தி மீனை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மத்தி மீனில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரிகிறது.
6. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியானால் சர்க்கரை நோயாளிகளுக்கு மத்தி மீன் மிகவும் நல்லது. ஆய்வுகளில் கூட மத்தி மீனை உணவில் சேர்ப்பது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு அந்த மீனில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் தான் காரணம். இந்த புரோட்டீன் இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
7. இரும்புச்சத்து அதிகம்
மத்தி மீனில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. இறைச்சியை விரும்பி சாப்பிடாதவர்கள், மத்தி மீனை உட்கொண்டால், இறைச்சியால் பெறும் சத்துக்கள் அனைத்தையும் இதில் இருந்து பெறலாம். இது தவிர மத்தி மீன் கரோனரி இதய நோய், இதய செயலிழப்பு, பல்மனரி ஹைப்பர்டென்சன் மற்றும் நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
8. மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது
மத்தி மீன் மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது. இதற்கு அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம். இந்த அமினோ அமிலங்கள் நரம்பு இழைகள் மற்றும் மூளையில் உள்ள செல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கின்றன. மேலும் இது டோபமைன் உற்பத்தியை அதிகரித்து, மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.