1. Home
  2. தமிழ்நாடு

ஆக.1 முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர்..!

1

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும்.

ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டம், நாட்டில் 2 ஆண்டு காலத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

உற்பத்தி துறைகள் உட்பட பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் வேலை அளிப்பவர்களுக்கு ஊக்குவிப்பை அளிக்கும். இத்திட்டம் முதல்முறை வேலையில் சேருபவர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பவர்களுக்கும் பயன்தரும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதல்முறையாக பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத இபிஎப் ஊதியம் ரூ.15,000 இரு தவணைகளாக வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் இந்த ஊக்கத் தொகையை பெறலாம். 6 மாத பணிக்குப்பின் முதல் தவணை ஊக்கத் தொகையும், ஓராண்டு பணிக்குப் பின் 2வது தவணை ஊக்கத் தொகையும் அளிக்கப்படும். இது அவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும்.

இத்திட்டம், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும். ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கும், 2 ஆண்டுகளுக்கு மாதம் ஊக்கத் தொகையாக ரூ.3,000-ஐ மத்திய அரசு வழங்கும். உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத்தொகை 4 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துடன் பதிவு செய்யப்பட்ட 50 ஊழியர்களுக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் இரு ஊழியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். 50 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள், 5 ஊழியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.

கூடுதல் ஊழியர்களுக்கு ரூ.10,000 வரை சம்பளம் வழங்கினால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.1,000 வரை ஊக்கத்தொகை கிடைக்கும். ரூ.20,000 வரை சம்பளம் வழங்கினால் ரூ.2,000 கிடைக்கும், ரூ.20,000-க்கு மேல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கினால், ரூ.3,000 கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like