வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் பொறுப்பேற்பு..!

இந்திய வானிலை துறையின் தென் மண்டல பிரிவாக, சென்னை வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது. இங்கு வானிலை அறிக்கைகளை வெளியிட, இயக்குநர் மற்றும் டி.டி.ஜி., எனப்படும் தலைவர் இருப்பர்.
தினசரி வானிலை அறிக்கைகள், இயக்குநர் வாயிலாக வெளியிடப்படும். புயல், மழை போன்ற காலங்களில், தென் மண்டல தலைவர், நேரடியாக அறிக்கைகளை வெளியிடுவார். பொது மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதுடன், தமிழக அரசுக்கும், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், வானிலை நிலவரத்தை, இந்த மையத்தின் தலைவர் வழங்கி வருகிறார்.
தென் மண்டல தலைவராக இருந்த எஸ். பாலச்சந்திரன், பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். இவர், கடந்த, 35 ஆண்டுகளாக, இந்திய வானிலை துறையில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார்.
எளிய தமிழில் வானிலை அறிக்கை விபரங்களை, பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தில், நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் பி.அமுதா, தென் மண்டல தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று முதல் அப்பொறுப்பை கவனிக்க உள்ளார்.
கடந்த, 1991ல், இந்திய வானிலை துறை பணியில் சேர்ந்த பி. அமுதா, சென்னை ராணி மேரி கல்லுாரியில், இயற்பியலில் முதுநிலை பட்டம், இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றவர். வடகிழக்கு பருவமழை மற்றும் புயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த, 33 ஆண்டுகளாக, இத்துறையில் பணியாற்றி வருகிறார். தென் மண்டல தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலக வானிலை அமைப்பு சார்பில் வழங்கப்படும் விருது பெற்ற, முதல் இந்தியர் இவர் என்பது கூடுதல் சிறப்பு.