இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாளறிவன், மனு பாக்கர், ரமிதா ஆகியோர் விளையாடினர். மொத்தம் 43 வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப்பெறுவார்கள். இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் சிறப்பாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறார்.
அதேநேரம், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 வது இடம்பிடித்ததால் அவர் நூலிழையில் அவர் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 8 வது இடம்பிடித்த பிரான்ஸ் வீராங்கனைக்கும் இளவேனிலுக்கும் இடையே 0.7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம்.
இறுதிப்போட்டியில் களமிறங்கிய மனு பாக்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 22.17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்று அசத்தினார். இது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். அத்துடன் நடப்பு ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற புகழையும் பெறுகிறார்.
முதல் இரண்டு இடங்களை தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2 புள்ளி), கிம் யேஜி (241.3) ஆகையோர் பிடித்தனர்.