2025ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..! எப்போ தெரியுமா ?

சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் வருவது வழக்கம். சூரியன் - சந்திரன் இதையே ஒரே நேர்கோட்டில் பூமி வருவதால், பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் போது சந்திர கிரகணம் நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் மார்ச் மாதத்தில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி 2025 மார்ச் 14ஆம் தேதி காலை 9.27 மணிக்கு தொடங்கி மாலை 3.03 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 12.28 மணிக்கு உச்சமடைகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கிரகணம் நடக்கும் நேரம் முழுவதும் பகல் நேரம் என்பதால், நம் நாட்டில் கிரகணத்தைப் பார்க்க இயலாது.
சந்திர கிரகணம் பல நிறங்களில் தெரிவது உண்டு. சில நேரங்களில் சிவப்பாக, சில நேரங்களில் நீல நிறத்தில் தெரியும். அந்த வகையில் மார்ச் 14ஆம் தேதி ஏற்படக்கூடிய சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் தோன்றுவதால் ரத்த சிவப்பு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
ஏனெனில், சூரிய ஒளியை பிரதிபலிக்கக் கூடிய சந்திரனை பூமி மறைக்கக் கூடிய இந்த நிகழ்வின் போது, பூமியின் வளிமண்டலத்தில் சூரிய ஒளி வடிகட்டப்படுவதால் சந்திரன் மீது சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. அதாவது இந்த நிகழ்வானது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது நிகழும் நிகழ்வுகளைப் போன்றது.
நாசாவின் வலைத்தளத்தின்படி, இந்த சந்திர கிரகணம் நிகழ்வானது வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும்.
அடுத்ததாக இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி வானில் தோன்ற உள்ளது. ஒரே மாதத்தில் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நாடுகள், வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் மட்டுமே காண முடியும். இந்த முதல் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் இரண்டையும் இந்திய நாட்டினர் பார்க்க முடியாது.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இரவு 8.58 மணி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.25 மணி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் சந்திரன் இரத்த நிறத்தில் காணப்படும். இந்த சந்திரனை 'பிளட் மூன்' என்று அழைப்பார்கள். இந்த சந்திர கிரகணம் இந்தியா மற்றும் துணைக் கண்ட நாடுகளிலிருந்து பார்க்க முடியும். மேலும் இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பிய நாடுகள், அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல் நாடுகள், ஆஸ்திரேலியா, இந்திய பெருங்கடல் நாடுகள் மற்றும் ஆசியாவின் பிற நாடுகளிலிருந்தும் காணலாம்.
2025 ஆம் ஆண்டின் கடைசி கிரகணம், செப்டம்பர் மாதம் 21-22 தேதிகளில் சூரிய கிரகணமாக வானத்தில் தோன்ற உள்ளது. அந்த சூரிய கிரகணத்தை நியூசிலாந்து, கிழக்கு மெலனேசியா, தெற்கு பாலினேசியா மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் இருந்து ஒரு பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்கு தெரியும். இந்த கிரகணத்தை இந்தியாவில் உள்ளவர்கள் பார்க்க முடியாது.