பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 5 பெண்கள் உடல்கருகி பலி!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் இரவும் பகலும் பணி நடப்பதாக கூறப்படுகிறது.
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பதறியடித்து அங்கு ஓடிச்சென்றனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம், விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் நிகழ்விடத்திலேயே லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய், காளீஸ்வரி உள்ளிட்ட 5 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலம் படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மதுரை டிஐஜி ராஜேந்திரன், பேரையூர் டிஎஸ்பி மதியழகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அரஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
இதனிடையே விசாரணையின்போது ஊரடங்கு விதிகளை மீறி 37 பேர் அந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
newstm.in