சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் பயங்கர தீ விபத்து..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பத்தூரில் உள்ள் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக ஏலகிரி மலை உள்ளது.
ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் மலை அடிவாரத்தில் இருந்து 13 வளைவுகள் கொண்ட மலை சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் இன்று 13வது வளைவில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து தீ மலை சாலையில் பரவிவருகிறது.
இதனால் அரிய வகை மூலிகைகள் இந்த தீயில் கருகி வருகின்றன. வளைவு சாலையில் வந்துகொண்டிருந்த பயணிகள் மலையில் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அச்சத்தில் திரும்பி சென்றனர். இந்த புகை மூட்டத்தின் காரணத்தால் மலை பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மலை அடிவாரத்தில் இருந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலையில் வன உயிரினங்கள் அதிகம் வாழ்ந்து வருவதால் அவற்றை பாதுகாக்க தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.