கோவையில் பயங்கர தீ விபத்து..! 300க்கும் அதிகமான மக்கள் கூடியதால் பரபரப்பு!
கோவை டி.வி.எஸ் நகர் செல்லும் வழியிலுள்ள 6000 சதுர அடி கொண்ட டீ தூள் குடோனில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு 300 க்கும் அதிகமான மக்கள் கூடினர். இதனால் அங்கு இரவு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் குடோன் மற்றும் அதன் கூரையில் தீ நன்கு பரவியது. மொத்தம் 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற டீ குடோன் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு கோவையில் செயல்பட்டுவந்த Crystal Tea India PVT.LTD நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
ஏதாவது பட்டாசு விழுந்து அதனால் தீ பற்றியதா அல்லது குடோனில் வேறு எதுவும் காரணத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதா என தீ விபத்துக்கான காரணம் குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.