1. Home
  2. தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தின் ஏடிசி டவரில் தீ விபத்து..!

Q

சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளை ஒருங்கிணைக்கும், ஏர் டிராபிக் கண்ட்ரோல் அலுவலகமான, ஏடிசி டவர் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் சென்னை வான் வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் கண்காணித்து, இயக்கி வரும் மிக முக்கியமான, பாதுகாக்கப்பட்ட இடம் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிசி டவர். இது 24 மணி நேரமும் இடைவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும்.

இந்நிலையில் ஏடிசி டவரின் நான்காவது தளம், மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அந்த நேரத்தில் ஏடிசி டவரில் பணியில் இருந்த அதிகாரிகள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.

உடனடியாக சென்னை விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு அவசர தகவல் கொடுத்தனர். இதை அடுத்து சென்னை விமான நிலைய தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். சுமார் 20 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.

 

அந்த மொட்டை மாடியில் உள்ள அறையில், பழைய கழிவு பொருட்கள் மற்றும் தேவை இல்லாத பொருட்களை போட்டு வைத்திருந்ததாகவும், அந்த அறையில் ஏற்பட்டுள்ள மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால், விமான கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

 

ஆனாலும் சென்னை விமான நிலையத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதிக அளவில் பாதுகாப்பு வாய்ந்த, ஏடிசி டவரில் இது போல் திடீர் தீ விபத்து நடந்தது, சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like