ஓடும் ரயிலில் தீ விபத்து... பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..!

ஃபலுக்னாமா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஹவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்க்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஹைதராபாத் அருகே உள்ள பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி இடையேயான வழித்தடத்தில் வந்தபோது ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் ரயில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே அதிகாரிகளின் கூறுகையில், ரயில் எண் 12703 (ஹவுரா - செகந்திராபாத்) ஃபலுக்னாமா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் (S4 & S5) ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பிடித்தது. சம்பவத்தையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் இதுவரை காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை.