இனி பணம் அனுப்ப கைரேகை, முக அடையாளம் போதும்..!
என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால், 2016ல் துவங்கப்பட்ட யு.பி.ஐ., வசதி, பயனர்கள் பல வங்கிக் கணக்குகளை ஒரே செயலியுடன் இணைத்து உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது. இது, 24 மணி நேரமும் பயன்படுத்தக்கூடியது. இது தற்போது நாடு முழுதும் பிரபலமாக உள்ளது. மாதந்தோறும் சராசரியாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் யு.பி.ஐ., வாயிலாக பணப்பரிவர்த்தனை நடக்கிறது.
ஒருவருக்கு பணம் அனுப்பும் போது, 'பின் நம்பர்' எனப்படும் நான்கு இலக்க அல்லது ஆறு இலக்க ரகசிய எண்ணை பதிவு வேண்டும். தற்போது என்.பி.சி.ஐ., அதில் கூடுதல் வசதியை சேர்க்க உள்ளது. இந்த ரகசிய எண்ணுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் கைரேகையை பதிவு செய்தும், முக அடையாளத்தை பதிவு செய்தும் இனி பணத்தை அனுப்பலாம். இது விரைவில், 'ஜிபே, போன்பே' உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
'கூகுள் பே, பேடிஎம், போன் பே' உள்ளிட்ட வங்கி கணக்கை கையாளும் அனைத்து செயலிகளிலும், இந்த விதிமுறைகள் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
யு.பி.ஐ., பயனர்கள், இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே தங்கள் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்க முடியும்.
இணைக்கப்பட்ட கணக்குகளின் பட்டியலை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். இது, கணினி பயன்பாட்டு நெரிசலைக் குறைப்பதற்கும், செயலியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ பே, எனப்படும் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுத்துக் கொள்ளும் செயல்முறைகளுக்கு குறிப்பிட்ட நேரம் வகுக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர சந்தா, இ.எம்.ஐ., போன்ற திட்டமிட்ட கட்டணங்கள், இனி காலை 10:00 மணிக்கு முன்பாகவும், மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், இரவு 9:30 மணிக்கு பிறகும் மேற்கொள்ளப்படும்.
அதேபோல், தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை நாளொன்றுக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
புதிய விதிமுறைகளின்படி, சரியான நபருக்கு பணம் செல்வதை உறுதி செய்யும் வகையில், பணம் பெறுபவரின் பெயரை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யு.பி.ஐ., மற்றும் வங்கிகளின் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாத கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.