7000 வரை அபராதம் ரத்து... இப்படி ஒரு மெசேஜ் வந்தால் நம்பாதீங்க..!
தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதங்களை விதிப்பதற்கு சில நவீன முறைகளை பின்பற்றி வருகிறது. சிக்னல்களை மீறுவோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், சீட் பெல்ட் அணியாமல் செல்வோர் என விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை நவீன கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராத தொகை வாட்ஸ்அப் வழியாகவோ அல்லது எஸ்எம்ஸ் வழியாகவோ வரும். தற்போது இதே முறை மோசடிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன எண்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே அந்த செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்று வரும். அதில், வாகன எண் குறிப்பிடப்பட்டு அது விதி மீறலில் ஈடுபட்டிருக்கிறது என்றும், எனவே உடனடியாக அபராதம் செலுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் உடனடியாக வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். வாகன எண் சரியாக இருப்பதாலும், வாகன உரிமம் ரத்த செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதாலும் சிலர் அபராதத்தை செலுத்த முன்வருவார்கள்.
உடனே லிங்கை கிளிக் செய்து அதை டவுன்டோடு செய்வார்கள். பின்னர் அதை ஓபன் செய்வார்கள். அப்படி செய்யும்போது செல்போனின் தரவுகளை படிக்க அனுமதி கேட்கும். இதற்கும் ஓகே கொடுத்துவிட்டு, அப்ளிகேஷனுக்குள் சென்றால் அடுத்தடுத்த கட்டங்களில் பணம் பறிபோகும்.
அதாவது செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி நடைபெறுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.ரூ.7,000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வதாகக் கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்புவார்கள். அந்த லிங்கை க்ளிக் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை பதிவு செய்யுமாறு கூறுவார்கள்.இதை செய்தால் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் திருடப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்படலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
எனவே இப்படியான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதே மோசடி வேறு மாதிரியாகவும் நடக்கும். அதாவது, உங்களுக்கு இவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையை ரத்து செய்ய அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. எனவே இதனை ரத்து செய்ய உடனடியாக இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிட்டு மெசேஜ் வரும். நம்பி கிளிக் செய்தால் மொத்த பணமும் சுருட்டப்படும். எனவே டிஜிட்டல் டெக்னாலஜி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ள்ளனர். அதேபோல அபராதங்களை செலுத்த அதிகாரப்பூர்வமான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.