1. Home
  2. தமிழ்நாடு

நிதியமைச்சருக்கு தமிழ் மீதும் தமிழ்நாடு மீது பற்றில்லை - எஸ்.எஸ்.சிவசங்கர்..!

1

அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்தவர் என்பது பாஜக நம்மை ஏமாற்றுவதற்கு சொல்கிற வார்த்தை. அவருக்கும் தமிழகத்திற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. அவருக்கு தமிழர் என்கிற உணர்வும் கிடையாது. தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அவர் பேசுகிறார் என்றால், எவ்வளவு கீழ்த்தரமான சொல் அது.

மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் நிதி அமைச்சர் பொறுப்பு இருக்கும். அந்த இடத்தில் இருந்துகொண்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்கிறார். ஆக, அவருக்கு தமிழ் மீதும் தமிழ்நாடு மீது பற்றில்லை, தமிழர்கள் மீது மதிப்பு இல்லை என்றே எண்ண வேண்டியுள்ளது.


மேலும் பொய் பேசுவதற்கு என்றே உருவாக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த, உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அமித்ஷா, பொய் பேசுவது கண்டனத்திற்குரியது. கருணாநிதி ஆட்சியில் தமிழ் வழியில் பொறியியல் படிக்க திட்டம் கொண்டுவரப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் அமல்படுத்தப்பட்டது. மருத்துவப் படிப்புக்கான தமிழ் வழிக் கல்வியும் இருக்கிறது.


ஆனால், வட இந்தியாவில் செய்வது போல, இருக்கும் உண்மையை மறைத்து பொய் செய்தியை பரப்புகிறார்கள். பொய் பிரச்சாரத்தை தமிழகத்தில் செய்யலாம் என்று நினைத்து ஒவ்வொரு முறையும் பின்னோக்கி செல்கிறார்கள். ஏற்கனவே மத ரீதியாக பிளவுபடுத்தலாம் என்று நினைத்தார்கள்... அதற்கு தமிழகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. முருகனின் வேல் பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும், அதற்கு மக்கள் செவிசாய்க்கவில்லை. ஆகவே, அமித்ஷா உண்மையை ஆய்வு செய்து பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like