1. Home
  2. தமிழ்நாடு

இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு : வரும் 4-ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை..!

1

பாராளுமன்ற மக்களவைக்கு  கடந்த மாதம் 19, 26, கடந்த 7, 13, 20, 25-ந்தேதிகளில் முதல் 6 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாராளுமன்ற மக்களவை தேர்தலின் நிறைவுக் கட்டமான 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசா மாநில சட்டசபையின் மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7-வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் உள்ளது. 3-வது முறையாக இந்த தொகுதியில் களம் இறங்கி இருக்கும் பிரதமர் மோடி இந்த தடவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு திரட்டினார்.

இன்று நடைபெறவுள்ள இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிழல் தரும் பந்தல், குடிநீர், சாய்வுதளம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உரியமுறையில் செய்யப்பட்டுள்ளன.வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடந்த 6 கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர். கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் ஏழுகட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் 4-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளன.

இன்றைய தேர்தலின் முக்கிய அம்சங்கள்:

1. ஒடிசாவில் 42 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல்.

2. இறுதிகட்ட தேர்தலுக்காக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள்.

3. தேர்தல் பணியில் 10.9 லட்சம் பணியாளர்கள்.

4. 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

5. 5.24 கோடி பேர் ஆண்கள். 4.82 கோடி பேர் பெண்கள். 3574 பேர் 3-ம் பாலினத்தவர்.

6. 172 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

7. தேர்தல் பணியில் 2707 பறக்கும் படைகள், 2799 நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

8. தேர்தல் பணியில் 1080 கண்காணிப்புக் குழுக்கள், 560 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள்.

Trending News

Latest News

You May Like