1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

1

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 27ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 1091 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர். புதுச்சேரியில் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 பேர் தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 28ம் தேதி நடந்தது. அப்போது, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. ஒரு சில முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கெல்லாம் வேட்புமனு தாக்கல் பரிசீலனையில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 651 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விளவங்கோடு சட்டமன்ற தேர்தலில் இறுதியாக 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற 29ம் தேதி மற்றும் 30ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. நேற்று முன்தினம் 29ம் தேதி அரசு விடுமுறை (பெரிய வெள்ளி) என்பதால் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டனர். 135 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று இரவு 8 மணிக்கு மேல் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 874 பேர் ஆண்களும், 76 பேர் பெண் வேட்பாளர்களும் ஆகும்.

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடும் அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சிக்கான சின்னம் வழங்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 152 சுயேச்சை சின்னங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கப்படும் என்றும் என்றும், ஒரு சின்னத்தை 2 சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மதிமுக இந்த தேர்தலில் அவர்கள் தொடர்ந்து போட்டியிடும் பம்பரம் சின்னம் கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பம்மரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. கடைசியில் மதிமுகவுக்கு 'தீப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘பானை' சின்னம் கேட்டது. தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்து விட்டது. நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையம் விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுத்து விட்டது. ஆனால், விசிக போட்டியிடும் விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரை சுயேச்சைகள் யாரும் பானை சின்னத்தை கேட்கவில்லை. திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்திலும் சுயேச்சைகள் கேட்டனர். ஆனால் கட்சியின் அடிப்படையில் அவர் கேட்டபடியே சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவனுக்கு 'பானை' சின்னம் கிடைத்தது. அதேபோன்று, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாளி சின்னம் கேட்டார். ஆனால் அதை மற்ற பன்னீர்செல்வம் கேட்டதால், குலுக்கல் அடிப்படையில் மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கடைசியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சுயேட்சை சின்னமான 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்டது.

இன்று அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியல், தமிழகத்தில் நாளை முதல் தங்கள் சின்னத்தை காண்பித்து வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்குவார்கள். இதனால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.

Trending News

Latest News

You May Like