1. Home
  2. தமிழ்நாடு

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் உங்களால் என்னை தடுத்து நிறுத்த முடியாது: அண்ணாமலை!

1

முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இவ்வாறு அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1956 -ஆம் ஆண்டு நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணா பேசியதாகவும், இதனால், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்தார் எனவும் இதனால் அண்ணாவும், பி.டி. ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே, அண்ணாமலையின் இந்த பேச்சு இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார். இது தொடர்பாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஓப்புதல் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்ய அளிக்கப்பட்ட விவரத்தை அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டார். அதன்பிறகே, அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணையில், ‘அண்ணாமலையின் பேச்சு இருதரப்பினரிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பது ஆவணங்களை பரிசீலித்த போது தெரிகிறது. எனவே, அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திருப்தி கொள்கிறது. இதற்கு தமிழக ஆளுநரும் அனுமதி அளித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலின் நகலையும் பகிர்ந்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு என் மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் உண்மையை பேசியதற்காக ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளது. சமீபத்தில், என்மீது வழக்குத் தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தியதற்காக வழக்கும், போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுக்கு பதவிகள் வழங்குவதும், திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது. 1956-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியதை, மக்கள் மனதில் இருந்து அழிக்க நினைத்து மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு திமுக அரசுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like