1. Home
  2. தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய போர் விமானங்கள்!

Q

இந்திய விமானப்படை விமானங்கள் போர்க்காலங்களில் மட்டுமின்றி பிற சமயங்களிலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. வான்வழி பாதுகாப்பு மற்றும் முக்கிய நபர்களின் போக்குவரத்து, கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக போர் விமானங்கள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் போது அவசர காலங்களில் விமானப்படை தளங்களுக்கு திரும்ப முடியாமல் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அதனை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் விமானங்களை தரையிறக்குவதற்கான பயிற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கெனவே புனே-மும்பை நெடுஞ்சாலை உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 16-ல் அவசரகால தரையிறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்திய விமானப்படை வழங்கிய தொழில்நுட்ப விவரக் குறிப்புகளின் அடிப்படையில் அந்த நெடுஞ்சாலையில் சுமார் 4.1 கிலோ மீட்டர் நீளமும், 33 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கான்கிரீட் சாலையில் சுகோய்-30 மற்றும் ஹாக் ஃபைட்டர் ரக போர் விமானங்களை தரையிறக்கி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. இதே போல் டோர்னியர் ரக போக்குவரத்து விமானம் ஒன்றையும் தரையிறக்கி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சோதனைகள் சக்சஸ் ஆகி இருப்பதால் இனி நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் பாதுகாப்பாக விமானத்தை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like