கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!
காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பகவதி அம்மன் கோவில், குமரி கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு குடும்பத்துடன் தங்களது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவது வழக்கம். எப்போது பார்த்தாலும் குமரி கடற்கடரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படும்.
மேலும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா படகு சேவை இயக்கப்பட்டு வருகின்றது. குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்ட பிறகு படகு சவாரியின் மூலம் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அருகே சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் குமரி கடலில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே குமரிக்கடலில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அதிக உயரத்துடன் எழுகின்றன. இதனால் மணக்குடி, கோவளம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.