அரசு மற்றும் தனியார் மருத்துவரை மிரட்டி 12 லட்சம் பணம் பறித்த பெண் ஆய்வாளர்..!
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகிதா அன்ன கிறிஸ்டி, இவரிடம் மறைமலைநகரை சேர்ந்த ஒரு பெண் தனது 17வயது மகளை ரஞ்சித்(27), என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது மறைமலை நகரில் இரண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு தான் கருவுற்ற போது மாத்திரைகள் வாங்கி கருகலைப்பு செய்ததாக கூறினார். இந்த தகவலை வைத்துக் கொண்டு ஆய்வாளர் மகிதா தனியார் மருத்துவமனை மருத்துவர் உமா மகேஸ்வரி என்பவரையும், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பராசக்தி என்பவரையும் 17 வயது சிறுமிக்கு கருகலைப்பு செய்ததாகவும், அதனை காவல் துறையில் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறி, கரு கலைப்பு மாத்திரை வழங்கியதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
பணத்தை வாங்க, பன்னீர்செல்வம் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் 2 லட்சம் ரூபாய் பணமும் லஞ்சமாக வாங்கியுள்ளார். இந்த தகவலை அறிந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மற்றும் வழக்கறிஞரை வரவழைத்து விசாரித்ததில் உண்மையென தெரியவந்ததன் பேரில் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.