செல்போன் டவர் மீது ஏறி தந்தை தற்கொலை மிரட்டல்..!
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் மாடசாமி (55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி (50). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் வசந்த (25) கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், வசந்த் அப்பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து கழுகுமலை போலீஸ் நிலையத்திலும் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.
இதில் மனமுடைந்து காணப்பட்ட மாடசாமி திடீரென்று நேற்று மாலை 4.30 மணியளவில் கிராமத்தில் உள்ள தனியார் ெசல்போன் டவரின் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மனநிலை பாதிக்கப்பட்ட மகனை மனநல காப்பத்தில் சேர்க்க என்னிடம் வசதி இல்லை. எனவே, அரசு செலவில் மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இல்லையேல் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்போன் டவரில் இருந்த அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனது கோரிக்கையை ஏற்கும் வரை கீழே இறங்கி வரமாட்டேன் என பிடிவாதமாக கூறினார். இதை தொடர்ந்து கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அவரிடம் செல்போன் டவர் மீது ஏறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர் கீழே இறங்கி வர சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அவரை செல்போன் டவரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி, கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து சுமார் 2 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது.