1. Home
  2. தமிழ்நாடு

பெங்களூரு கூட்ட நெரிசலில் மகனை இழந்த அப்பா கதறல்!

11

2025ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 18 ஆண்டுகளாக கோப்பையை பெற ஆர்.சி.பி அணி போராடிவந்த நிலையில், இந்த முறை வெற்றிபெற்றிருப்பதை அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே மிகவும் விமரிசையாகக் கொண்டாடினர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்சிபி வீரர்களைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் அறிவித்திருக்கிறது.

இருந்தாலும் தங்களது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பிள்ளைகளை இழந்த பெற்றோர் கதறி அழும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைக்கும்படி உள்ளது.

இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் பொறியியல் மாணவரான பூமிக் என்பவரும் ஒருவர். இவர் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திலிருக்கும் பேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட குப்பகோட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு வைத்து பூமிக்கின் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. இன்று அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் சடங்குகள் நடைபெற்றன.

அப்போது அவருடைய தந்தை டி.டி லட்சுமணன், பூமிக்கை புதைத்த இடத்தில் படுத்துக்கொண்டு, "எந்தவொரு அப்பாவுக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரவேகூடாது. நான் இந்த இடத்தை என் மகனுக்காக உருவாக்கினேன். ஆனால் இப்போது அவனை இங்கே படுக்க வைத்திருக்கிறேன். இதுபோன்றவொரு சூழ்நிலையை யாரும் எதிர்கொள்ளக்கூடாது. நானும் என் மகனுடனேயே படுத்துக்கொள்கிறேன்” என்று கதறி அழுதார்.

சம்பவம் நடந்த தினத்தன்று பூமிக் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து தனது நண்பர்களுடன் சின்னசாமி மைதானத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

டி.டி லட்சுமணன் - அஸ்வினி தம்பதியின் ஒரே மகன் பூமிக். கடந்த 20 ஆண்டுகளாக இந்த குடும்பம் பெங்களூருவில் வசித்து வருகிறது. லட்சுமணன் அங்கு ஒரு சிறிய தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரில் மகனுக்காக நிலம் வாங்கி வைத்திருந்திருக்கிறார். அந்த நிலத்தில்தான் தனது ஒரே மகனான பூமிக்கின் உடலை புதைத்திருப்பதால் லட்சுமணனின் குடும்பமே இப்போது தாங்க முடியாத துயரத்தில் இருக்கிறது.

Trending News

Latest News

You May Like