7 வயது மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை..!
சென்னையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). இவர் ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரெபேக்கா. இவர்களுக்கு 7 வயதில் ஸ்டெபி ரோஸ் என்ற மகள் இருந்து வந்தாள்.
இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தனது மகளை மனைவி பிரித்து விடுவாரோ? என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து மகள் ஸ்டெபி ரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், சதீஷ்குமாரை மீட்ட போலீசார் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதையடுத்து பரங்கிமலை போலீசார் மகளை கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீஷ்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் சதீஷ்குமாரை ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தீபிகா உத்தரவிட்டார்.
மகளை இழந்து தவிக்கும் தாய் ரெபேக்கா கண்ணீர் மல்க கூறியதாவது:-
சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. குடித்துவிட்டு வந்தால் என்னுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். சில நேரங்களில் கண்மூடித்தனமாக தாக்குவார். இதனால், உயிருக்கு பயந்து நான் எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். இதுதொடர்பாக, கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகள் ஸ்டெபி ரோஸ் என்னிடம்தான் இருந்தாள். அவ்வப்போது பார்க்க வேண்டும் என்று வீட்டிற்கு அழைத்து செல்வான். சாப்பாடு ஊட்டியதாகவும், குளிப்பாட்டி விட்டதாகவும் பாசமாக இருந்ததுபோல் சொல்வான். இந்த நிலையில், எனது மகளை நானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டரும் சதீஷ்குமாரை அழைத்து பேசினார்.
சதீஷ்குமார் காவல் நிலையம் வரும்போதெல்லாம் அவருடன் 5 வக்கீல்கள் வருவார்கள். அவர்கள் அனைவரும் பெண் இன்ஸ்பெக்டரிடம் சிரித்து சிரித்து பேசிவிட்டு செல்வார்கள். நான் ஒரு ஓரமாக அழுதுகொண்டே நிற்பேன். என்னுடைய குழந்தையை பெற்றுத்தர பெண் இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான், போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் அளித்தேன். இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததின் அடிப்படையில், சதீஷ்குமார் சற்று இறங்கிவந்து பேசினான். குழந்தையை என்னிடம் தருவதாக கூறினான். அதன்பிறகு, குழந்தை என்னிடம்தான் இருந்தாள். எப்போதாவது சதீஷ்குமார் வந்து அழைத்து செல்வான்.
அவனுக்கு என்னையும், எனது தந்தையையும்தான் பிடிக்காது. அதனால், எங்களைத்தான் ஏதாவது செய்வான் என்று நினைத்திருந்தேன். குழந்தையை ஒன்றும் செய்யமாட்டான் என்று நம்பினேன். ஆனால், என்னிடம் அடிக்கடி ஒன்றை கூறுவான். நீ விவாகரத்து பெற்று என்னை பிரிந்து சென்றால், குழந்தையும், நானும் செத்துவிடுவோம் என்று கூறுவான். இப்போது அதேபோல், செய்துவிட்டான். குழந்தையை வழக்கம்போல் அழைத்து செல்வதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால், இப்படி கொன்றுவிட்டானே. இவ்வாறு அவர் கூறினார்.
.png)