வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ: வராமல் தடுப்பது எப்படி?

இந்த நோய், வைரஸ், பாக்டீரியா அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் கண் சிவப்பாக மாறி, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் கூச்சம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஒரு வாரம் வரை நீடிக்கும் இந்த மெட்ராஸ் ஐ நோயால் அருகில் இருப்பவர்களும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய், காற்றில் பரவக் கூடிய தொற்று நோய் என்பதால் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்ற அனைவருக்குமே எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
லேசாக கண் உறுத்தலுடன் தொடங்கும் இந்த நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது அவசியம். சுயமாக கண் சொட்டு மருந்துகள் எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், நோய் தீவிரமடையும் முன்பு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
மெட்ராஸ் ஐ என்ற இந்த கண் நோயின் முக்கிய அறிகுறிகள் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்படைதல். இவை தவிர கண் இமை வீக்கம், குழந்தைகளுக்கு காய்ச்சலும் ஏற்படலாம். இந்த நோய் தற்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிகளவில் பரவி வருவதாகவும், நாளொன்றிற்கு 30% மக்கள் கண் நோய் பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக வருவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
’’சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதையும் ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளை உபயோகிப்பதையும் நோயாளிகள் தவிர்க்க வேண்டும். உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் என்ன?
- ஒரு கண்ணோ அல்லது இரண்டு கண்களும் சிவந்து இருப்பது
- கண்களில் எரிச்சல், வலி அல்லது அரிப்பு
- கண் இமைகள் வீக்கம்
- கண் இமைகள் ஒட்டுதல் (கண் இமைகள் அதிகப்படியான வெள்ளை நிறத்தினால திரவத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும், குறிப்பாக அதிகாலையில் எழுந்தவுடன்.)
- அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடியாது
- கண்களில் இருந்து நீர் வெளியேற்றம்
- பாக்டீரியாவால் கண்ணிமையில் சீழ் வர வாய்ப்பு உள்ளது. நோய்த்தொற்று கண் பார்வைக்கு பரவினால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
- மெட்ராஸ் ஐ - யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம்
- குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
மெட்ராஸ் ஐ-க்கு என்ன சிகிச்சை?
- இந்த அறிகுறிகள் தென்படும் போது கண்களைத் தேய்க்கவோ, கண்களில் கைகளை வைக்கவோ கூடாது.
- சுத்தமான துணி அல்லது கைக்குட்டையால் கண்களைத் துடைக்கவும்.
- அடர்த்தியான நிறங்களில் கண்ணாடி அணிவது பாதிப்பில் இருந்து சிறிது நிவாரணம் அளிக்கலாம்.
- காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
- வைரஸால் ஏற்படும் பிரச்சனை பொதுவாக ஓரிரு வாரங்களில் குறையும்.
- பாக்டீரியாவால் பிரச்னை ஏற்பட்டால், நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, சரியான மருந்தை, சரியான அளவு நாட்களுக்கு, சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
மெட்ராஸ் ஐ ஏற்படாமல் தடுப்பது எப்படி?
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெட்ராஸ் ஐ பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
உங்கள் கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும். கண்ணாடியைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை குறைக்கலாம் என்பதோடு இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதையும், நீச்சல் குளங்களை பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் துண்டுகள், கைக்குட்டைகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் . இதன் மூலம் தொற்று பரவால் தடுக்கலாம்.
வீட்டு வைத்தியம் செய்து நேரத்தை வீணடிக்காமல், பாதிப்பு சிறியதாக இருக்கும்போதே மருத்துவரின் ஆலோசனைப்படி முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.