விரைவில் சென்னை கடற்கரையில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூல்..!
சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்தக் கட்டணத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறையை அமல்படுத்துமாறு மாநகராட்சி வருவாய்த்துறை மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறைக்கு மாநகராட்சி கமிஷனர் குமர குருபரன் உத்தரவிட்டு உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி துணை கமிஷனர் பிரிதிவிராஜ் தலைமையில் மாநகர வருவாய் அலுவலர், சிறப்பு திட்டத்துறை கண்காணிப்பு பொறியாளர், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டல அலுவலர்கள், சேவை வழங்கும் நிறுவனங்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடைபெற்றது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியது,
ஆலோசனை கூட்டத்தில், கடற்கரையில் எதை நுழைவு வழியாகவும், எதை வெளியேறும் வழியாகவும் அமைப்பது, கிடைக்கும் வருவாயில் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இடையிலான பங்கீட்டு அளவு, கட்டண வசூலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள்குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் குறிப்பாகப் பாஸ்டேக் முறையை அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதைக் கொண்டு வந்தால், சுங்கச்சாவடி போல, மெரினா அல்லது பெசன்ட்நகர் கடற்கரை வாகன நிறுத்தப் பகுதிக்குள் கார் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
மேலும் நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது எனச் செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது மெரினாவில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வார நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரம் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலாகிறது. நவீன முறையைக் கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.