கர்நாடக அரசைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் ரயில் மறியல்..!
கர்நாடக அரசைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பங்கேற்ற விவசாயிகள் காய்ந்த நெற்கதிரை கையில் ஏந்தி, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் கருப்பு பட்டை அணிந்து காய்ந்த நெற்கதிருடன் கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விவசாயிகளில் சிலர் அருகே இருந்த தண்டவாளத்தை நோக்கி ஓடிச்சென்று அவ்வழியே சென்ற ரயிலை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
இதேபோல் கீழ்வேளூரில் சில விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் காவல் துறை கண்காணிப்பாளருடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.