பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழியாக கொலையாளிகளை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக உளவுத்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி பாம் சரவணனை ஆந்திராவில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை ஒன்றில் பாம் சரவணன் சிகிச்சை பெற வந்ததாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற சென்னை பெருநகர காவல் துறையின் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அங்கேயே வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏ ப்ளஸ் ரவுடி பட்டியலில் இருக்கும் பாம் சரவணன் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் ஆற்காடு சுரேஷ் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது பாம் சரவணன் மீது ஐந்து கொலை வழக்குகள், வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
ஐந்து முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாம் சரவணன் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்தார். மேலும் பிரபல ரவுடி காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்ற ரவுடிகளின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னரசு கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக ஆற்காடு சுரேஷை பாம் சரவணன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க ஆற்காடு சுரேஷ் தரப்பினரை கொலை செய்ய பாம் சரவணன் ரகசியமாக திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை சந்தேகித்த நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட வந்து நிலையில்தான் தற்போது பாம் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.