பிரபல ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருதுவிற்கு புது பொறுப்பு..!
எம்.ஜி.ஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட், தமிழ்நாடு மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. திரைக்கதை மற்றும் இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலி பொறியியல், திரைப்பட எடிட்டிங் மற்றும் திரைப்பட செயலாக்கம் போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள இந்நிறுவனத்தின் தலைவராக ட்ராட்ஸ்கி மருதுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு திரைப்படங்களில் கலை மற்றும் சிறப்புத்தோற்ற இயக்குநராகப் பணியாற்றியுள்ள டிராட்ஸ்கி மருது, ஜெயம் ரவி நடித்த 'பேராண்மை' திரைப்படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடித்திருந்தார். சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு அப்பாவாக கௌரவ வேடமேற்று நடித்தார் டிராட்ஸ்கி மருது. 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த ஓவியர் விருதையும், 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் டிராட்ஸ்கி மருது.