குடும்பப் பிரச்சனை... சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து திடீரென குதித்த நபரால் பரபரப்பு..!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி கிருஷ்ணமாச்சாரி மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், ஒருவர் திடீரென மேம்பாலத்தின் நடுவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மேம்பாலத்தின் மீதிருந்து கீழே குதித்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து அங்கிருந்தவர்கள், போக்குவரத்துக் காவலர்கள் உதவியுடன் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாப்பூர் போலீசார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் வந்த வாகன எண்ணை வைத்து அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணன் என்பதும் அவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக சிகிச்சை பெற்றதும் பின் சிகிச்சையை பாதியில் நிறுத்தியதும் தெரியவந்தது.
மேலும், அவர் தனது வீட்டில் ஏற்பட்ட சில குடும்பப் பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தற்கொலை முதற்சி மேற்கொண்ட விஜய் கிருஷ்ணனுக்கு 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டு, முதுகுத் தண்டுவடத்திலும் காயம் ஏற்பட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் தற்போது உள்நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய் கிருஷ்ணனின் தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.