1. Home
  2. தமிழ்நாடு

ஆண்களுக்கு இணையாக இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய பெண்கள்!!

ஆண்களுக்கு இணையாக இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய பெண்கள்!!


தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் குறிப்பாக பாண்டி நாட்டில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக அந்த காலத்தில் ஒரு வழக்கமுண்டு. நாகரிக காலத்தில் இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்து போய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 45, 60, 90, 140 கிலோ எடை கொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழ செய்யவேண்டும்.

தமிழரின் உடல் பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது.

Nellai

இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 40, 60, 90, 119,140 கிலோ எடையுள்ள இளவட்ட கற்களை தூக்கி வலம் வந்து சாதனை நிகழ்த்தினர். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பின்பு உரல் தூக்கும் போட்டி நடைபெற்றது. உரல்களை அதிகமுறை தூக்கிபோட்ட பெண்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் பல இளைஞர்கள் உரல்லை ஒருகையால் தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையையும் நிகழ்த்தினர். பெண்கள் உரல் தூக்கும் போட்டியில் முதல்பரிசு ராஜகுமாரி , இரண்டாம் பரிசு பத்மா ஆகியோர் பெற்றனர். இளவட்ட கல் 140 கிலோ கல்லை தூக்கி சாதனை படைத்த தங்கராஜ் என்பவருக்கு முதல்பரிசு வழங்கப் பட்டது.

Trending News

Latest News

You May Like