பொய்யான தகவல் பரவுது… விளக்கம் கொடுத்த மெட்ராஸ் டாக்கீஸ்..!!

நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்தினம் கூட்டணி அமைந்த நிலையில் தக் லைஃப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான நிலையில் கர்நாடகாவில் படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. பல தடைகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. படம் ட்ரோல் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இப்படியான நிலையில் தான் நேற்று, ” எங்கள் இருவரிடம் இருந்து இன்னொரு நாயகன் படம் எதிர்பார்த்தவர்களுக்கு, நான் சொல்வது ஒன்று தான், எங்களை மன்னித்து விடுங்கள்.
நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய விரும்பினோம். ஓவர் எதிர்பார்ப்பு என்பதை தாண்டி இது வேறு விதமான expectation” என மணிரத்தினம் மன்னிப்பு கேட்டது போல தகவல் வெளியானது. இந்நிலையில் தக் லைப் பட விவகாரத்தில் இயக்குனர் மணிரத்தினம் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்பதால் அவர் மன்னிப்பு கேட்டதாக பரவி வரும் தகவல் தவறானது என்று மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.