மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி… போலி மருத்துவர் கைது!

தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண் பிபிஏ படித்துவிட்டு கணினி மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் இணையதளத்தில் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அனிதா அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் உதயகுமார் என்று கூறி ஒருவர் பேசியுள்ளார். அனிதாவுக்கு பார்மசி டிபார்ட்மெண்டில் வேலை வழங்குவதாக கூறிய உதயகுமார் நேரில் வந்து ரூ.50 ஆயிரம் பணம் பெற்று சென்றுள்ளார்.
பின்னர் அனிதாவை சி.எம்.சி மருத்துவமனையில் பணி செய்யும் பெண் டாக்டரிடம் அழைத்து சென்று பேச வைத்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது உதயகுமாரே பெண் குரலில் பேசி முழு பணத்தையும் கொடுத்தால் பணிக்கு சேர்ப்பதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து உதயகுமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அனிதா சி.எம்.சி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த போது டாக்டர் உதயகுமார் என யாரும் இங்கு பணிபுரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா காட்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் கருகம்புத்தூரை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சி.எம்.சி மருத்துவர் என கூறிகொண்டு பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவர் மீது வேலூர், பாகாயம் ஆகிய காவல் நிலையங்களிலும் புகார்கள் உள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in