இனி பேஸ்புக் லைவ் வீடியோக்கள் 30 நாட்களில் தானாக நீக்கப்படும் ..!

இனி பயனர்களால் உருவாக்கப்பட்ட லைவ் வீடியோக்கள் பதிவிட்ட 30 நாட்களுக்கு மட்டுமே அவர்களின் பக்கத்தில் இருக்கும். அந்த காலகட்டத்தில், லைவ் வீடியோக்களை கிளிப்புகள் அல்லது ரீல்களாகப் பகிரலாம். பயனர்களேகூட வீடியோக்களை நீக்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம்.
30 நாட்களுக்குப் பிறகு, உங்கள் வீடியோவை பார்க்க முடியாது, மேலும் அது உங்கள் பக்கத்தில் இருந்து தானாகவே அகற்றப்படும். மெட்டா சர்வர்களில் இருந்தும் நீக்கப்படும்" என்று பேஸ்புக் பேஸ்புக்கின் நியூஸ்ரூம் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது
பயனர்கள் தங்கள் கணக்கில் இது செயல்படுத்தப்படும்போது மின்னஞ்சல் மூலம் அறிவிப்பைப் பெறுவார்கள். அந்த அறிவிப்பு கிடைத்த நாளில் இருந்து, அந்தப் பயனரின் கணக்கில் எந்த லைவ் வீடியோவும் பதிவிட்ட 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்பட்டுவிடும்.
"உங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டும் உங்கள் பழைய லைவ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய அல்லது கிளவுட் ஸ்டோரேஜுக்கு மாற்றிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்" என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதிக அவகாசம் தேவைப்பட்டால், 6 மாதங்களுக்கு வீடியோ நீக்கத்தை ஒத்திவைக்கும் வாய்ப்பும் வழங்கப்படும். ஆனால், லைவ் வீடியோ நீக்கத்தை பயனர்கள் ஒரு முறை மட்டுமே ஒத்திவைக்க முடியும். ஆறு மாதங்கள் கடந்ததும், பழைய லைவ் வீடியோக்கள் நீக்கப்படும்.
ஒரு பயனர் இறந்த பிறகு அவரது கணக்கு நினைவுகூரல் கணக்காக மாற்றப்பட்டால், அதில் இருந்து எந்த வீடியோவும் நீக்கப்படாது என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. இறந்த நபர் வெளியிட்ட பதிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அவற்றை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்வையிடலாம்.