சென்னையில் வரும் சனிக்கிழமை முதல் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..!
சென்னை, எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "மெட்ராஸ் “ஐ” என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய், சென்னைப் பகுதியில் சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல டெல்லியில் நடைபெற்றுள்ள கூட்டத்தில் கூட இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் போன்ற பல்வேறு மாநிலங்களில் கூட இந்நோய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவழை வருவதற்கு முன்னால் இந்நோய் பாதிப்பு என்பது கூடுதலாகி கொண்டு இருக்கிறது.
ஆகையால் இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை பாதுகாக்கின்ற வகையில் அவர்களுக்கு இந்நோய் பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கின்ற வகையில் இம்மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசினைப் பொறுத்தவரை, தமிழக முதல்வர் எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக நாள் ஒன்றுக்கு 100-க்கும் குறைவானவர்களே இந்நோய் பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை வருகின்றபோது பருவமழைகளுக்கு முன்னால் இதுபோன்ற பாதிப்புகள் என்பது தினந்தோறும் பல நூறுகளைத் தாண்டும். ஆனால் தற்போது தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக நூற்றுக்கும் குறைவானவர்களே இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மெட்ராஸ் ‘’ஐ’’-க்கு என்று தனியாக வார்டு இருக்கிறது. அந்த வார்டிலும் தற்போது ஆய்வு செய்தோம். அதில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மெட்ராஸ் ஐ குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுவதால் சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சிப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெரும் பள்ளிகள் என்று ஏறத்தாழு 12 லட்சம் மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். எனவே இந்த 12 லட்சம் மாணவர்களுக்கும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த மாதம் கண் பரிசோதனை செய்யலாம் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.
அந்த வகையில் வருகின்ற 16.09.2023 முதல் 25.09.2023 வரை 10 நாட்களுக்கு தொடர்ச்சியான அனைத்து பள்ளிகளிலும் நம்மிடம் இருக்கின்ற 400க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களையும் கொண்டும், அரிமா சங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் அமைப்பில் உள்ள மருத்துவர்களை கொண்டும் கண் மருத்துவ உதவியாளர்களையும் கொண்டும் 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.