கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மகளுக்கு ஆயுள் தண்டனை..!
சென்னையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ். இவர், சென்னையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆம்ஸ்டராங்கின் நெருங்கிய நண்பராக இருந்தார். 2014-ல் சென்னை ஒட்டேரியில் அடுக்குமாடிக் குடியுருப்பில் வழக்கறிஞர் காமராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாகச் சென்னை கொரட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கல்பனா, கார்த்திக், ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, காமராஜ் கொலை வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் 2015 முதல் நடைபெற்று வந்தது.
விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி, காமராஜ் சகோதரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, விசாரணையை விரைவில் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கறிஞர் காமராஜர் கொலை வழக்கில் கைதான கல்பனாவுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், கார்த்திக், ஆனந்தன் ஆகியோரை விடுதலை செய்தும் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பளித்தார்.